Monday, March 24, 2008

டாலரின் வீழ்ச்சி


ஆர்.எஸ். நாராயணன்


ஐந்தாண்டுகளுக்கு முன்பு டாலர் விலை ரூ. 50ஐ ஒட்டியிருந்தது. இன்றைய நிலை ரூ. 40.45. ஏறத்தாழ 10 டாலர் அளவில் வீழ்ச்சி. இந்திய ஏற்றுமதியாளர் கள் ""ஐயோ ஐயோ'' என்று அலறுகின்றனர். ஒரு வெள்ளைக்காரன் விழுந்து காயப்பட்டால், இந்தியனுக்கு நெறிக்கட்டுவது ஏன்? இதில்தான் உலகமயமாத லின் உண்மை பொதிந்துள் ளது. இன்று சகல உலக சர்வாதிகாரியாக உள்ளவர் அமெரிக்க அதிபர். ""பாட்டும் நானே பாவமும் நானே; நான் அசைந்தால் அசையும் உலகே'' என்று இந்திய அமைச்சர்களைப் பாட வைக்கும் திருவிளை யாடலைச் செய்பவர் அமெரிக்க அதிபர் புஷ். இந்த புஷ்ஷை, புஷ் செய்ய இயலாத நிதியமைச்சர், நிலைகுலைந்து விட்டதுடன், ஏற்றுமதியாளர்களுக்கு நஷ்ட ஈடு நல்கி, இவரும் சில சங்கதிகளைச் சேர்த்துப் பாடுகிறார். சுத்தமில் லாத சுருதிகளைச் சேர்க்கும் இந்த சிதம்பர ரகசியம் என்னவோ? இதனால் இந்தியாவுக்கு எந்த நன்மையும் இல்லை. ஒவ்வொரு பத்தாண்டின் இறுதியிலும் அமெரிக்க டாலர் வீழ்வதும் இந்தியப் பங்குச் சந்தை சரிவதும் வாடிக்கை யாகிவிட்டது. இதற்கான ""காரணம் கேட்டுவாடி'' என்றால் "காதலன் சிதம்பரநாதன்'' மழுப்புவது ஏன்?


அமெரிக்காவில் ""வீட்டு அடமான ஊழலின் விளைவு'' என்று புரியும்படி கூறாமல் ""சப் பிரைம் மார்ட்கேஜ்'' ஒரு புரியாத வாசகம் வெளிவருகிறது. அமெரிக்காவில் வீட்டு விலை சரிந்துவிட்டது. ரியல் எஸ்டேட் சற்று படுத்து விட்டது. சரியான சொத்துப் பத்திரங்கள் இல்லாமல் கட்டட முதலாளிகளுக் குக் கடன் அள்ளி வழங்கப்படும் ஒரு முறையைத்தான் ""சப் பிரைம் மார்ட்கேஜ்'' என்று பூசி மெழுகிக் கூறுகிறார்கள். அமெரிக்க கஜானாவிலிருந்து 2004 - 2006-இல் புழங்கவிடப்பட்ட வீட்டுக்கடன் தொகைகளில் 15 சதம் - அதாவது 1.5 ட்ரில்லியன் டாலர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முடங்கிப் போனதாகத் தகவல். ஒரு ட்ரில்லியன் என்றால் பதினாயிரம் கோடி. அதாவது ஒன்றுபோட்டு பதினோரு பூஜ்ஜியங்கள். 100,000,000,000 சரியா. இந்தக் கவலை எல்லாம் நமக்கு ஏன்?


கவலை உண்டு. உலக வங்கிச் சந்தையில் - உலகப் பங்குச் சந்தையில் அங்கம் வகிக்கும் இந்தியாவுக்கும் இதனால் நஷ்டம். இந்தியா மட்டுமல்ல; உலகப் பங்குச் சந்தையில் பங்கேற்றுள்ள எல்லா வளர்முக நாடுகளுக்கும் நஷ்டமே. எனினும், ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டுள்ள முதலாளித்துவ ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுக்கு பதிலடி தரும் அளவில் பலமுள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் டாலர் வீழ்ச்சி மறைமுகமாக நம்மிடமிருந்து வசூலாகிறது. இந்தியாவில் ஏற்றுமதியாளர்களுக்கு நிதியமைச் சர் மக்களின் வரிப்பணத்தை அல்லவா அள்ளித் தருகிறார். யார் வீட்டு முதலை யார் அள்ளித் தருவது? இப்படி ஏற்றுமதியை மையமிட்டுத்தான் இந்தியா வளர வேண்டுமா? 1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்ற தருணத்தில் நாம் மறந்துவிட்ட நமது தேசப்பிதா மகாத்மா காந்தி, ""இது வெறும் அரசியல் சுதந்திரமே. பொருளியல் சுதந்திரம் பெற்றால்தான் நிஜமான இந்திய சுதந்திரம்'' என்று பகிரங்கமாகக் கூறினார். இந்திய விடுதலைக்குப் பின் காந்தி வாழ்ந்தது ஐந்தே மாதங்கள்தாம். இந்து - முஸ்லிம் மதக்கலவரம் அவர் உயிரைப் பறித்துவிட்டது. காந்தியின் தன்னிறைவுப் பொருளாதாரத் திட்டங்கள் எல்லாமே காலத்திற்கு ஒவ்வாதவை என்று தவறாக முடிவு செய்யப்பட்டு காந்தியின் மறைவுக்குப் பின் அவை படிப்படியாகப் புறக்கணிக்கப்பட்டன. இந்திய விடுதலைக்குப் பின் பிரதமரான நேரு, காலனியப் பொருளாதாரத் தத்துவங்களுடன் சோஷலிசத்தையும் கலப்படம் செய்து ஐந்தாண்டுத் திட்டங்களை வகுத்தார். எனினும் காந்தியப் பொருளாதாரத்தை முற்றிலும் புறக்கணிக்காமல் காதி -கிராமியக் கைத்தொழில் அமைச்சரகத்தை உருவாக்கி நிறைய சலுகைகளையும் வழங்கினார்.


நேருவுக்குப் பின் இந்திரா காந்தியும் சோஷலிசக் கருத்துகளைச் சற்றுத் தூக்கிப்பிடித்த அதே சமயம், பெரிய ஒளிவிளக்குகளுக்கு இடையே உள்ள இருட்டைப் போக்கும் அளவில் ஓர் அகல்விளக்கு அளவில் காந்தியத்தைக் காப்பாற்றினார். இப்போது என்ன நிகழ்கிறது? "தன்னிறைவுப் பொருளாதாரம்'' என்ற அகல்விளக்கையும் அணைத்துவிட்டு, பெயருக்குக் கதராடை பூண்டுள்ள காங்கிரஸ் அமைச்சர்களும், கதராடை அணியாத காங்கிரஸ் அமைச்சர்களும் "உலகமயமாதல்'' என்ற அமெரிக்கச் சுரண்டலுக்கு அடிபணிந்து, ஏற்றுமதியை உயர்த்த இந்தியாவை வளர்ப்பதாக எண்ணிக்கொண்டு, நாட்டையே அமெரிக் காவுக்கு அடகு வைக்கின்றனர். உணவு உற்பத்தி குறைந்து உணவு இறக்குமதி நிகழ்வதும், நல்ல விளைநிலங்களில் உணவுப் பயிரை உற்பத்தி செய்யாமல் காட்டாமணக்கை உற்பத்தி செய்து அமெரிக்க -ஐரோப்பிய எரிசக்தி நெருக்கடியைத் தீர்ப்பதில் ஆர்வமாயுள்ளனர். அமெரிக்காவிலிருந்து கோதுமை வாங்குவார்கள். தாய்லாந்திலிருந்து அரிசியை வாங்குவார்கள். ஆப்பிரிக்காவி லிருந்து மக்காச்சோளமும் காக்காச்சோளமும் வரலாம். இந்தியாவோ காட்டா மணக்கு எண்ணெயை ஏற்றுமதி செய்யும். இப்படியெல்லாம் இந்தியாவை அச்சுறுத்தி, அமெரிக்கா நம்மை மானபங்கம் செய்து, டாலர் வீழ்ச்சியிலிருந்து தப்பிக்கும். இன்று அமைச்சர்களின் பணியே நாட்டை விற்பதுதானே! அமெரிக் காவில் டாலர் வீழ்ச்சியுறலாம். ஆனால் இந்திய அமைச்சர்களுக்கு டாலர் வந்து கொண்டிருக்கும்.

இந்தியப் பிரதமராயிருப்பவர் ஒரு காலகட்டத்தில் உலக வங்கியில் பணிபுரிந்தவர் என்பதால் அமெரிக்க டாலர் வீழ்ச்சிக்கு அவரும் பொறுப்பேற்று அதைத் தடுத்து நிறுத்தப் பாடுபடுவதும் இயல்புதானே. ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் கவனிக் கப்படும் தரம், குறிப்பாக வேளாண் ஏற்றுமதியில் கண்காணிக்கப்படும் நச்சின் அளவுகோல் உள்ளூர் விற்பனையில் இல்லை. ஆகவே நாம் ஏற்றுமதி செய்யும் நறுமணப் பொருள் களான மிளகு, ஏலம், காபி, தேயிலை போன்றவை நல்ல தரத்தில் விஷமில் லாமல் இயற்கை வழி மூலம் ஊட்டம் வழங்கக் காட்டப்படும் முனைப்பு, நாம் உண்ணும் உணவுப் பொருள்களுக்கோ, காய்கறி களுக்கோ வழங்கப்படுவ தில்லை.

தேவர்கள் அமிர்தம் உண்ண அசுரர்களைப் பயன்படுத்தினார்கள். திருப்பாற்கடலைக் கடைவதற்கு மட்டும் அசுரர்கள் பயன்பட்டார்கள். தேவர்களுக்கு அமிர்தம் கிடைத்தது. அசுரர்களுக்கு விஷம் கிடைத்தது. இன்று தேவர்களாயுள்ள அமெரிக்கர்களுக்கும் வெண்தோல் ஐரோப்பியர்களுக்கும் விஷமில்லாத அமிர்த உணவை நாம் ஏற்றுமதி செய்கிறோம். விஷமான உணவை நாம் உண்டு நோயுறுகிறோம். இது போதாது என்று பன்னாட்டு நிறுவனங்களின் கோகோ கோலா, பெப்சி கோலா, பாண்டா, மிரண்டா என்ற பல விஷங்களும் நமக்குத் தண்ணீராய்க் கிடைக்கிறது. ஏற்றுமதி ஏற்றுமதி என்று கூறி, அன்னிய மூலதனத்தை வரவழைத்து, பன்னாட்டு வங்கிகளையும் வரவழைத்து, உலக வங்கிக் கடன்களைக் கொட்டி, அமெரிக்காவின் ஒரு காலனி நாடாக இந்தியாவை மாற்றிய பின்னர், டாலரின் வீழ்ச்சி என்பது நிலையானது அல்லவே.


மென்பொருள் ஏற்றுமதி மூலம் எவ்வளவு டாலர் இந்தியாவுக்கு வருகிறது? ரூபாயில் மதிப்பிட்டால் அவை பல கோடி ரூபாய் என்று நிதியமைச்சர் பேசக்கூடும். இப்போது ஒரு டாலருக்கு 10 ரூபாய் குறைகிறதே. பல கோடி நஷ்டம் அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு வந்துள்ளதே. இந்தியப் பங்குச் சந்தை சரிந்துவிட்டதே. அப்படியெல்லாம் விட்டுவிடாமல் டாலர் விலையை உயர்த்த இந்தியர்கள் பாடுபடுவார்கள். மென்பொருள் ஏற்றுமதி என்று கூறுகி றார்களே அதன் ரகசியம் என்ன? இன்றைய இந்தியாவில் குறிப்பாகப் பொறியியல் பட்டதாரிகள் கூடவே கணினித் தேர்ச்சியும் உள்ளவர்களுக்கு அமெரிக்காவில் வேலை அல்லது அமெரிக்கப் பணிகளை இங்கிருந்து செய்து தரும் நிறுவனங்களில் மாதச்சம்பளம் ரூ. 10,000-இல் தொடங்கி ரூ. 1,00,000 வரை பெறக்கூடிய வாய்ப்பு உண்டு.


இதனால் யாருக்கு லாபம்? கூட்டிக் கழித்துப் பார்த்தால் லாபம் அமெரிக்கா வுக்கு. அமெரிக்கப் பணி செய்யும் இந்திய நிறுவனங்கள் இரவு - பகல் பாராமல் 24 மணிநேரம் பணி செய்கின்றன. அமெரிக்க வேலை செய்யும் இந்திய மென்பொருள் பொறியாளர் களுக்கு லட்ச ரூபாய் சம்பளம் என்றால் அமெரிக்காவுக்கு கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளைச் செய்து டாலர் வீழ்ச்சிக்கு இந்தியர்கள் முட்டுத் தருவதைப் புரிந்து கொள்வது கடினம் அல்லவே.

உலகமயமாதலில் இந்தியாவில் பொறியியல் பட்டதாரிகள் லாபம் பெறலாம். சராசரி நடுத்தர வர்க்க மக்களுக்கோ, விவசாயிகளுக்கோ, சிறு வணிகர்களுக் கோ லாபம் உண்டா? சிறுதொழில், குடிசைத்தொழில், மகளிர் சுய தேவைக்குழு, விவசாயிகள் போன்ற பிரிவினருக்கு எந்தக் கடன் உதவிகளும் வழங்கப் படுவது இல்லை. அமெரிக்காவின் கருவூலச் செயலாளர் ஹென்றி பால்சன், ஒரு காலத்தில் வால்தெரு வங்கியாளராயிருந்தவரின் கருத்துப்படி, 2008-இல் ஏற்பட்டுள்ள இப்போதைய டாலர் வீழ்ச்சி, ""குறுகிய கால வீழ்ச்சியல்ல'' என்று தெரிவித்துள்ளார். எனினும், வளர்முக நாடுகளில் பெறக்கூடிய லாபத்தால் வரும் ஆண்டில் இது சரியாகிவிடும்.


அமெரிக்க ஏற்றுமதி உயர வேண்டுமானால் ரூபாய் மதிப்பைக் குறைத்தாவது டாலர் மதிப்பை உயர்த்த வேண்டும். இந்தியப் பிரதமரும், நிதியமைச்சரும் இதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள். அமெரிக்காவின் உதவி வேண்டுமென்று எண்ணும் விசுவாசிகள். டாலர் வீழ்ந்தாலென்ன? யூரோ வீழ்ந்தாலென்ன? உலக வங்கியையும், உள்நாட்டில் உள்ள அமெரிக்கப் பன்னாட்டு நிறுவன வங்கி களையும் வாழ வைக்கும் இந்தியாவுக்கு இது ஒரு பொருட்டல்ல. விரைவில் டாலரின் மதிப்பு உயரும் வாய்ப்புகள் நிறையவே உண்டு.

Thanks : Dinamani

Wednesday, March 19, 2008

நடமாடும் இரத்த வங்கியை அறிமுகப்படுத்தியவர் -டாக்டர் நார்மன் பெத்யூன்



மேடம் சன்யாட்சன்



கடந்த காலத்து மனித உலகத்தை தற்போதைய உலகத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால், தற்போதைய உலகம் எவ்வளவு தூரத்திற்குச் சிக்கலாக உள்ளது என்பதை ஒருவரால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். மிக முன்னே றிய தகவல் தொலைத்தொடர்பு காரணமாய், உலகத்தின் மற்றும் மனித சமூகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நடக்கும் தனிப்பட்ட சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட சீரழிவு என்று எதுவும் தற்போது இல்லை; அதுபோலவே அனைவருடைய முன்னேற்றத்திற்கும் உதவாத தனிப்பட்டவர்களின் முன்னேற்றங்களுக்கு மட்டும் உதவும் வளர்ச்சியைக் கூட முன்னேற்றம் என்று கூற முடியாது.



தற்போதைய நிலைமை, நமது மக்களது மனதில் சரியான முறையில்தான் பிரதிபலிக்கின்றன. மனித மனத்தில் உள்ள விஷயங்கள் கூட, உலகளாவிய வாய்ப்புகளுடனும், சிக்கல்களுடனும் தான் உள்ளன என்பதை மறுக்க முடியாது. தன்னுடைய அண்டை நாட்டவர்களிடம் உள்ள உறவைக்காட்டிலும், தனது உள்நாட்டு நிலைமையைக் கணக்கில் கொண்டு, தனது நாடு மற்றும் மக்களின் நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படுவது என்பது இன்றைய மனிதனுக்குப் போதாது. இன்றைய உலக நிலைமையின் அழுத்தம், நம் அனைவரையும் சுற்றிக் கொண்டு அலைக்கழிக்கிறது. ஆகவே, இதில் அனைவரும் கலந்து கொள்வதின் மூலமும், அதற்குப் பங்களிப்பதன் மூலமும் மட்டும்தான், நாம் நமது எதிர்காலத்தைச் சரியான திசையில் செல்ல நிர்பந்திக்க முடியும். இன்றைய மனிதனுடைய சிந்தனை செய்ய வேண்டிய உச்சக்கட்ட வேலை என்னவென்றால், சாவுக்கும் மற்றும் பிற்போக்கு சக்தி களுக்கும் எதிராகப் போராடுவதும், முந்தைய உலகம் தராத ஆனால், நமது உலகம் தற்போதைய உலகம் தரும் வாய்ப்புக்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, அந்த உலகத்தை மனிதனுக்காகப் படைத்துப் புதிய யதார்த்தத்தை ஏற்படுத்துவதுதான்.



காலம் கோரும் பணிகளை, அனைத்தையும் விஞ்சும் அளவுக்கு ஈடுபாட்டுடன், உறுதியுடன், தைரியத்துடன், திறமையுடன் செய்பவர்களைத்தான், அந்தக் காலக்கட்டத்தின் மகாமனிதர்களாய் நாம் கருதுகிறோம். இன்றைய காலக் கட்டத்தில் இப்படிப்பட்ட மகாமனிதர்களின் பணிகள் என்பது உலகம் தழுவியதாக இருக்கும். ஆகவே, தற்போதைய மகாமனிதர்கள் அவர்கள் தமது உள்நாட்டில் பணிபுரிந்தாலும் சரி அல்லது வெளிநாட்டில் பணிபுரிந்தாலும் சரி, அவர்கள் உலக மகாமனிதராகவே கருதப்படுகிறார்கள். வரலாற்றைப் புனராலோசனை செய்யும் வரைக்கும் காலம் தாழ்த்தாமல், உடனடியாகத் தற்போதே அவர்கள் மகாமனிதர்களாய் கருதப்படுகிறார்கள்.



நார்மன் பெத்யூனும் மகாமனிதர்தான். அவர் மூன்று நாடுகளில் வளர்ந்து, பணிபுரிந்து போராடிய போராளி; முதலில் அவரது சொந்த நாடான கனடாவில், பின்னர் முற்போக்கு எண்ணமுள்ள அனைத்து நாட்டு மனிதர்களும் ஒன்றாய் கூடி நாஜியிசத்திற்கும், பாசிசத்திற்கும் எதிராக மக்களின் முதல் பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையை °பெயினில் நடத்திய போது, அங்கு சென்று கலந்து கொண்டார். சீனாவில், ஜப்பானிய பாசி°டுகள் தாங்கள் கைப்பற்றி விட்டதாகச் சந்தோசமாக நினைத்துக் கொண்டிருந்த சீனப்பகுதிகளை மீட்டு, தேசிய விடுதலைக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் புதிய அடித்தளத்தை அமைத்த நமது கொரில்லா படையை பெரும் வல்லமை வாய்ந்த மக்கள் இராணுவமாக மாற்ற உதவினார். அந்த ராணுவம்தான் கடைசியாக சீனாவை விடுவித்தது.



நார்மன் பெத்யூன் ஒரு மருத்துவர். அவர் தனது தொழிலில் தனக்கு நன்கு பரிச்சயமான உபகரணங்களை ஆயுதமாகப் பயன்படுத்திக்கொண்டு சண்டையிட்டார். அவர் தனது துறை சார்ந்த அறிவியலில் பெரும் திறமை சாலி மட்டும் அல்லாது முன்னோடியும் ஆவார். அவர் தனது ஆயுதங்களை எப்போதும் கூர்மையாகவும், புதுப்பொழிவுடனும் வைத்திருந்தார். அவர் தனது பெரும் திறன்களை உணர்வுப் பூர்வமாகவும், தொடர்ந்து பாசிசத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் எதிராகப்போராடும் முன்னணி படைக்கலமாகவும் செலவழித்தார். அவரைப் பொறுத்தமட்டில் பாசிசம் என்பது பெரும் கொள்ளை நோய்; அந்த நோய் தான் எதைக்காட்டிலும் மனித இனத்திற்குப் பேரழிவை ஏற்படுத்துவதாகும்.



யுத்தகளத்தில் இரத்த வங்கிக் கொணர்ந்த முதல் மருத்துவ மனிதன் டாக்டர் நார்மன் பெத்யூன்தான். இரத்தமாற்று மூலம், °பெயின் குடியரசுப் படையின் நூற்றுக்கணக்கான போராளிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். சீனாவில் அவர் கீழ்க்காணும் சுலோகத்தை இறக்கிவிட்டு, அதைத்தானும் கடைபிடித்தார். “மருத்துவர்களே! காயம் அடைந்தவர்களிடம் நீங்கள் போங்கள்! அவர்கள் உங்களிடம் வரவேண்டும் எனக் காத்திருக்காதீர்கள்!”



டாக்டர் நார்மன் பெத்யூன் ஏற்படுத்திய சர்வதேச அமைதி மருத்துவமனைகள் தற்போதைய புதிய நிலையில், விடுதலை பெற்ற சீனாவில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தான் இறந்தபிறகு அதைத் தொடர்ந்து நடத்துவதற்காக டாக்டர் கீச்சை பெத்யூன் நியமித்திருந்தார். டாக்டர் கீச், பெத்யூனுடன் சேர்ந்து °பெயின் போரில் கலந்து கொண்டவர் ஆவார். ஆனால் அவர் இந்தப் பொறுப்பை எடுத்துச் செய்வதற்கு, சியாங்கை சேக்கின் அரசு அனுமதிக்க வில்லை. கடைசியில் இந்திய மருத்துவ யூனிட்டைச் சார்ந்த டாக்டர் கோட்னி°, டாக்டர் பெத்யூன் மருத்துவமனைகளின் டைரக்டர் கொறுப்பை ஏற்றுக் கொண்டு, அவர் விட்டுச்சென்ற பணிகளை மிகத் தைரியமாகச் செய்தார். ஆனால், அவரும் தான் பணிபுரிந்து கொண்டிருக்கும்போதே இறந்தார். அவரைக் குணப்படுத்தும் மருந்து கிடைக்காததால் தான், அவரும் இறந்தார். டாக்டர் பெத்யூனுக்கம், டாக்டர் கோட்டினி°க்கும் தரப்பட வேண்டிய மருந்துகள் தடை செய்யப்பட்டிருந்தமையால். சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டு இறந்த பலரில் அவர்களும் ஒருவராகிவிட்டனர். அந்தத் தடை மட்டும் இல்லாமலிருந்தார், அவர்கள் இன்றும் உயிருடன் இருந்து உலக மக்களின் விடுதலைக்காகப் போராடிக் கொண்டு இருந்திருப்பார்கள்.



நமது காலக்கட்டத்தின் மகாமனிதரான டாக்டர் பெத்யூனுடன், நான் தனிப்பட்ட முறையில் பரிச்சயம் வைத்துக் கொண்டதற்காக அடையும் மகிழ்ச்சியைக் காட்டிலும், அவரது வாழ்க்கையைப் பெரும் மக்கள் திரளுக்கு அறிமுகப்படுத்து வதில் பெரிதும் புளகாங்கிதம் அடைகிறேன். விடுதலைக்காகப் போராடும் அனைத்து மக்களுக்கும் ஒரு பொதுவான களனாய்த் திகழ்ந்து, அதன் உயர்ந்த சின்னமாய் டாக்டர் பெத்யூன் இன்றும் திகழ்கிறார். அவரது வாழ்க்கை, இறப்பு, பாரம்பரியம் என்று அனைத்தும் எனக்கு மிகவும் நெருக்கமானதாகும். நான் சேர்மனாயுள்ள சீன நல்கழகத்திற்கு அவரது பணியையும், அவரது நினைவை யும் தொடர்ந்து எடுத்துச் செல்லும் பொருட்டும், பெத்யூன் அமைதி மருத்துவ மனை மற்றும் பெத்யூன் மருத்துவப்பள்ளி வலைப்பின்னலுக்கு ஆதரவு பெறுவதற்கும் உழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே அந்தப்பணி யை மேற்கொண்டு நாங்கள் செய்து வருகிறோம். ஆகவே, அவர் நமது தேசிய விடுதலைக்காக மக்கள் போரில் பெரும் சேவை செய்தார் என்பதற்கு மட்டுமல்லாமல், என் லீக் பணியின் காரணமாகவும் அவர் எனக்கு மிகவும் நெருங்கியவராகிறார்.



நவசீனா, டாக்டர் பெத்யூனை எப்போதும் மறக்காது. நமது விடுதலைக்கு உதவியதில் அவரும் ஒருவர், அவரது பணியும், அவரது நினைவுகளும் எப்போதும் நம்மிடம் நீங்காது நிறைந்து நிற்கும்.



இப்புத்தகம்


டாக்டர் நார்மன் பெத்யூன், சவுத்விஷன் 215 (132) அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை - 600 086.விலை ரூ.120/-

Saturday, March 15, 2008

பெண்மை காக்கப்படல் வேண்டும்...



சென்னை எத்திராஜ் கல்லூரியைச் சேர்ந்த சரிகாஷா மற்றும் அவரது தோழிகள் கடந்த 18.7.98 அன்று கல்லூரி சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது, காங்கிரஸ் இளைஞர் மாநாட்டில் பங்கேற்று திரும்பிய முருகன், ஹரி, சரவணன், பன்னீர் செல்வம், ஸ்ரீதர், வினோத், சி.ஸ்ரீதர், பிரபுதாஸ், புகழேந்தி ஆகிய ஒன்பது பேரும் ஒரு ஆட்டோவில் அந்த சாலையில் வந்துகொண்டிருந்தனர்.


அப்போது சரிகாஷா மற்றும் அவரது தோழிகள்மீது தங்கள் கைகளில் இருந்த தண்ணீர் பாக்கெட்டை பீச்சிஅடித்து கேலி செய்தனர். ஆட்டோவில் இருந்த ஹரி திடீரென்று சரிகாஷா மீது விழுந்தார், இதனால் சரிகாஷா கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்தார்.


இச்சம்பவம் சென்னையில் மட்டுமல்லாது தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், குற்றவாளிகளைக் கைது செய்யகோரியும், பெண் களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரியும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. அதன் விளைவாக தமிழக அரசும் பெண்கள் கேலி செய்வதைத் தடுக்க (ஈவ் டீசிங் ஆக்ட்) தனிச்சட்டம் கொண்டுவந்தது.


குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது சென்னை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ப்பட்டு 26.4.2001 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 9 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.8000/- அபராதமும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதில் 14.03.2008 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பின் விபரம் பின்வருமாறு...


பெண்களுக்கு எதிராக கருக்கலைப்பு, வரதட்சணைக் கொடுமை, பாலியல் கொடுமை, சிறுமிகளைக் கற்பழித்து கொலை செய்தல் போன்ற வன்கொடுமை கள் நடக்கின்ற, இந்தக் கொடுமைகளில் ஒன்று பெண்களை கேலி செய்யும் ஈவ்டீசிங் ஆகும். பொது இடங்களில் பெண்களை கேலி செய்தால், அப்பெண் கள் கவுரவத்தை இழக்கிறார்கள். அவர்கள் உரிமை பாதிக்கப்படுகிறது. இது ஒரு சமூகக்குற்றமாகும். இதனால் பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்கள் தான்.


நாகரிகம் உள்ள சமூகம் இதை எளிதாக விட்டுவிட முடியாது.ஈவ்டீசிங் காரணமாக ஒரு அப்பாவி பெண், அதாவது கல்லூரி மாணவி, கல்லூரி அருகிலேயே பலியாகி உள்ளார். அவரது பிறந்தநாள் அன்று இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. இந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்த பிறகு பொது இடங்களில் பெண்களை கேலி செய்வதை முற்றிலும் அகற்ற முடிவு செய்த தமிழக அரசு, தமிழ்நாடு பெண்கள் கேலி தடுப்பு சட்டத்தை 1998 ல் இயற்றியது. இச்சட்டம் அமலுக்கு வந்த பின்பும் பல பெண்கள் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இதுபோன்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் பயத்தால் வெளியில் சொல்லாமல் உள்ளனர்.


பெண் என்ற ஒரு காரணத்திற்காக அவர்கள் மீது சிலர் வன்மையாக நடந்து கொள்கின்றனர். இது போன்ற சம்பவம் நடக்கும்போது, அதில் இருந்து காத்துக்கொள்ளவும், சுயநம்பிக்கையுடன் வாழவும் நேரம் வந்துள்ளது. பெண்கள் நலனை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அரசுகுக்கும், சமூகத்திற்கும் உள்ளது. சரிகாஷா சம்பவத்தை பொறுத்த வரையில்,. பொது சாலையில் பட்டப்பகலில் விரட்டி ஈவ்டீசிங் நடத்தியதால் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. அந்தமாணவி அமைதியாக இருந்ததால் தான் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. தன் மீது தண்ணீர் பீய்ச்சும்போது ஏன் செய்கிறீர்கள்? என்று கேட்டிருந்தால், தப்பித்தால் போதும் என்று 9 பேரும் தப்பி ஓடியிருப்பார்கள்.அவர் தைரியதாகக் கேட்டிருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது. ஆனால் அமைதியாக பயந்துபோய் இருந்ததால் தான் அவர் மேலே விழுந்துள்ளனர். இதனால் அவர் முழுமையாக அமைதியாக இருக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.


ஒவ்வொரு நாளும் சமூகவிரோதச் செயல்களில் பெண்கள் பல சங்கடங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இவற்றை தடுப்பது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். சமூக ரீதியாக, பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளைக் கருத்தில் கொண்டு மாநில அரசுக்கு இந்த கோர்ட் பரிந்துரை செய்கிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் பெண்க ளுக்கு ஒரு சிறப்பு பாடத்தை அறிமுகப்படுத்த வேண்டும். நமது நாட்டில் உள்ள சட்டங்கள் குறித்தும், எந்தெந்த நிவாரணங்களை சட்டரீதியாக பெறலாம் என்பது குறித்தும், இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கும் போது அதைத்தடுக்க முறை என்ன? என்பது குறித்து அந்தப்பாடத்தில் சொல்லித்தர வேண்டும்.இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைவரும்போது தைரியத்துடன் எப்படி பாதுகாத்துக்கொள்வது என்பதை நிபுணர்கள் பற்றிகள் மற்றும் கல்லூரிகளில் வாரத்திற்கு ஒருமுறை பாடம் எடுக்க வேண்டும். பெண்களிடமிருந்து வரும் புகார்கள் மீது போலிசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேற்கண்ட 9 பேருக்கும் சென்னை செசன்சு கோர்ட் விதித்த தண்டனை சரியானதே என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கூறியுள்ளது.மேற்கண்ட தீர்ப்பு மிகவும் வரவேற்க்கத்தக்கதே.. பெண்கள் மீதான கொடுமைகள் குறித்து உயர்நீதி மன்ற நீதிபதி தெரிவித்துள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மையானவை.


ஆனாலும், நீதிபதி அவர்களே தனது தீர்ப்பில், பெண்கள் மீதான கொடுமை களுக்கு எதிராகச் சட்டம் அமல்படுத்தப்பட்டும் பல பெண்கள் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனும் போது ஆணாதிக்க, பெண்ண டிமைச் சிந்தனையின் வெளிப்பாடகவே பெண்கள் மீதான இத்தாக்குதல்கள் கருதப்பட வேண்டும்.ஆண்களும், பெண்களும் சமம் என்ற என்பது வெறும் பேச்சளவில் இல்லாமல், உண்மையில் அவர்களுக்கும் சம உரிமை மற்றும் பெண்கள் மீதான தங்களது பார்வையை ஆண்கள் மாற்றிக்கொள்ளல், போலிசாரும் பெண்கள் அளிக்கும் புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தல், பெண்கள் கூடும் இடங்களில் அவர்களுக்கு பாதுகாப்பளித்தல், பெற்றோரும் தங்கள் குழந்தைகளை எல்லா பயிற்சியும் அளித்து வளர்க்க வேண்டியது அவசியமும், தேவையுமாய் இருக்கிறது.

Friday, March 14, 2008

மேலை நாடு நோக்கி...

கி.பி. 606 - 647

நான்காம் நூற்றாண்டு முதலே கல்வி கற்பதற்கான மிகச் சிறந்த இடமாக இந்தியா திகழ்ந்தது. அதனால் இந்தியா பல வெளிநாட்டு மாணவர்களை ஈர்த்தது. அரசின் நிதியுதவியோடு நாளந்தா, உஜ்ஜயினி, கயா மற்றும் தட்சசீலத்தில் சிறந்த கல்வி மையங்கள் செயல்பட்டன. இங்கே இடம் கிடைப்பது மிகவும் அரிதாக இருந்தது. கல்வியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும்.

அத்தகையோர் வரும்போது அவர்களுக்கு என்ன காத்திருந்தது? மிகக்கடினமான நுழைவுத் தேர்வும், அதில் தேர்ந்துவிட்டால் கலாச்சார வேறுபாடும், தாய்மண் ஏக்கமும் தான். தேர்விலே வெற்றி பெற்ற “லீ”யினால் இவை அனைத்தையும் தாண்டி வர முடிந்ததா?



சிறிய குவளைகளில் தேநீரை ஊற்றும் போது “லீ”யின் கைகள் பதட்டமுற்றன.

இந்த விநோதமான தேநீரை அவனது நண்பன் சரிபுத்தா பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. தேயிலை எனும் புதர்ச் செடியிலிருந்து தயாரிக்கப்படும் இந்த பானம் அவனைக் கவரவில்லை எற்ன போதும், நண்பனின் மனம் புண்படாமல் பார்த்துக்கொண்டான். தன் தாய்நாட்டிலிருந்து இந்த இலைகளைப் பத்திரப்படுத்திக் கொண்டு வந்தததிலிருந்தே, அது அவனுக்கு எவ்வளவு விருப்பமானது என அறிந்து கொண்டான். எனவே, அதனை வெகுவாய் ரசித்துக் குடிப்பது போன்று உறிஞ்சினான்.

“இதே விழாவிற்கு நீ முன்னமும் வந்ததாய் கூறினாயே சரிபுத்தா?”

“ஆம் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் வந்திருந்தேன். அப்போது ஹர்சரின் தலைநகரம் பிராயக் அல்ல, கன்னோதி, அங்குதான் விழா நடைபெற்றது.”

“அவ்விழா எவ்வாறிருந்தது நண்பா?”

“மிகச் சிறப்பாக இருந்தது லீ. அதிலும் யுவான் சுவாங்கின் அமர்வு மிகச் சிறப்பாக இருந்தது. அவர் உனது சீனநாட்டிலிருந்து வந்திருந்தார். மகாயான புத்தமதம் பற்றிய விவாதம் இருபத்து மூன்று நாட்கள் நடந்தது. அதில் என்னைப்போன்ற நான்காயிரம் பௌத்த துறவிகள் பங்கேற்றுள்ளோம் லீ.”

“பௌத்த துறவிகள் மட்டுமா பங்கேற்றனர்?” “இல்லை பலரும் பங்கேற்றனர். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஜைன முனிவர்கள், பல பிராமண அறிஞர்கள், அரசர்கள் பங்கேற்றனர். நான் விவாதங்களில் பெரும் பங்கு வகிக்கவில்லை. அவற்றை கேட்பதிலேயே ஆர்வமாயிருந்தேன்.”
லீ சிரித்துவிட்டான்.

“இதை நம்ப மாட்டேன் நண்பா. கேள்வி கேட்பதிலும், விவாதிப்பதிலும் நீ ஈடுபடாவிட்டால் உனக்கு மன நிறைவே இராது.”

“ஆமாம். உண்மைதான். ஆனால் அப்போது நான் மிகவும் கூச்ச சுபாவமுடையவனாயிருந்தேன். பல ஆண்டுகளாய் இங்கு விவாதத்தின் மூலம் கற்கத் துவங்கியதனால் தான் இப்படி மாறிப்போனேன்.”

“நான் இன்னும் கூட கூச்ச முடையவனாகவே உள்ளேன் சரி புத்தா. முதன் முதலில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் ஆறுமாடிக்கட்டிடத்தின் முன் நின்று பிரமித்துப்போனேன். இங்கே நான் என்ன செய்யப்போகிறேன் என்று மிரண்டு போனேன். நுழைவுத் தேர்வில் தேறுவேனா எனவும் ஐயங்கொண்டேன்.”

“ஆனால் நீதான் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டாய் லீ! தேர்வு எழுதும் ஒவ்வொரு பத்து மாணவர்களில் இருவரோ, மூவரோதான் தேர்ச்சி அடைவர் எனக்கூறப்பட்டது.”

“எப்படியோ உலகின் தரமான கல்வியை நாளந்தா பல்கலைக்கழகத்தில் பெறும் பத்தாயிரம் அதிர்ஷ்டக்கார மாணவர்களில் நானும் ஒருவனாகிவிட்டேன். உணவு, உறைவிடம் அனைத்தும் இலவசமாய் பெறுவது அதிர்ஷ்டமின்றி வேறென்ன? சீனத்திலிருந்து வெகுதூரம் பயணித்து இங்கு வந்த பின் இடம் கிடைக்காமல் திரும்பினால், என் குடும்பத்தாருக்கு நான் என்ன பதில் சொல்வேன்? இங்கே நான் அனுமதிக்கப்பட்ட பின்பும் கூட என்னால் நம்ப முடியவில்லை!”

சரிபுத்தன் தன் தேநீர் குவளையைக் காலி செய்தான். “லீ உனக்கு இங்கு இருக்கும் மலையளவு கல்விப்பணிகளில், உன் துவக்ககால பதட்டமெல்லாம் பறந்து போகும். சரி பிரயாக் பயணத்திற்கு நீ தயாராகிவிட்டாயா?”

“தயார் நண்பா. கிளம்புவோம்.”

இருவரும் நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தைத் தாண்டி பல கிராமங்களையும், நகரங்களையும் கடந்தனர். ஒவ்வொரு நாளும் நீண்ட தூரம் நடந்து சத்திரங்களில் தங்கி மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தனர். அவர்கள் சந்தித்த ஒவ்வொருவரும் அந்த விழாவினைப் பற்றியே பேசினர்.
கிராமங்களையும், நகரங்களையும் கடந்த அந்தப் பயணம் புதிது புதிதாய் நிறைய அனுபவங்களைத் தந்தது. சீனத்தைப் போலன்றி மக்களின் தைக்கப்படாத நீண்ட ஆடைகள் புதிதாய் இருந்தன. பெரும்பாலான வீடுகள் களிமண்ணாலோ, செங்கல்லாலோ கட்டப்பட்ட கூறைவீடுகளாய் இருந்தன. முன்பின் அறிமுகமற்றவர் வீடுகளில் இருமுறை தங்க நேர்ந்தது. அவர்களின் உபசரிப்பும், சுத்தமான வீடுகளும் அவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டதும் மிகுந்த மனநிறைவைத் தந்தன.

ஒரு நகரைக்கடக்கும் போது கேட்ட மேளச்சத்தத்திற்கான விளக்கம் அறியும் வரை இந்நாடு பற்றிய மிக உயர்ந்த எண்ணமே கொண்டிருந்தான் லீ!

திடீரெனக் கேட்ட கொட்டுச் சத்தத்தினைத் தொடர்ந்து தெருவிலிருந்த பலரும் விரைந்து ஓடினர்.
“என்ன சத்தம் இது சரிபுத்தா?” என்று கேட்டான் லீ.

“நகரத்தின் இந்தத் தெருவுக்குள் தாழ்த்தப்பட்ட சாதி மனிதன் யாரோ வருகிறான். ஒரு புலையனாக இருக்கலாம். அவர்கள் நகருக்கு வெளியே வாழ்கின்றர். அவர்கள் நகரத்துக்குள் வரும்போது அவர்களைக் கண்டோ, தீண்டியோ மேல் சாதியினர் புனிதம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காகவே முன்னறிவிப்பு செய்ய அந்தச் சத்தம் எழுப்பப்படுகிறது லீ” என விளக்கினான் சரிபுத்தன்.


“என்ன கொடுமை இது! இந்தியாவின் மேன்மை கண்டு எவ்வளவோ வியந்துள்ளேன். அத்தகைய நாட்டில் இத்தனை கொடூரமான நடைமுறையா? இத்தனை அநாகரீகமான தீண்டாமை இந்தியாவில் உள்ளதா? எப்படி இதனை ஏற்றுக் கொள்ள முடிகிறது உன்னால்?” என்று படபடத்தான் லீ.

“நான் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை நண்பனே. ஆனால் நான் ஒருவன் என்ன செய்துவிட முடியும்?” என்றான் சரிபுத்தன்.

லீ வழிநெடுக தன் மனவேதனையைப் பகிர்ந்து கொண்டான். பேசப்பேசத்தான் ,துபோன்ற நடைமுறைகள் கல்வியில் சிறந்த இந்தியாவில் இருப்பதை அறிந்து கொண்டான். அரசர் ஹர்சரின் சகோதரி தன் கணவன் இறந்ததும், உடன் கட்டை ஏற முயன்றதும், அதனை ஹர்சர் தடுத்து நிறுத்தியதையும் அறிந்து மேலும் அதிர்ச்சியடைந்தான். அறிஞர்கள் பெருகிய இந்தியாவில் சாதிக் கொடுமை, தீண்டாமை, உடன்கட்டை ஏறுதல் எனும் கொடுமைகள் இருப்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அன்று மாலை சத்திரத்தில் ஓய்வு எடுக்கும்போது தனக்கும், சரிபுத்திரனுக்கும் இடையே கண்ணுக்குத் தெரியாத ஒரு திரை விழுந்துவிட்டதைப் போல் உணர்ந்தான் லீ! அவனை எத்தனை சமாதானப்படுத்தியும் சரிபுத்தனால் இயல்பாக்கிட முடியவில்லை.

அவன் குழப்பத்திலும், வேதனையிலும் தூக்கமின்றி தவித்தான். அவனுக்கு தலைவலிக்க ஆரம்பித்தது.

சீனர்களிலும் மேம்பட்டவர்கள் இந்தியர்கள் எனும் லீயின் எண்ணம் தகர்ந்தது.
மக்கள் எல்லா இடங்களிலும் ஒன்று போலத்தான் உள்ளனர். அவர்களின் வெளிப்படுத்தல்தான் வெவ்வேறாக உள்ளது என எண்ணினான்.

தூக்கம் வரும்வரை இதனையே நினைத்து குழம்பிக்கொண்டிருந்தான்.
மறுநாள் அதனை மறந்து மீண்டும் பயணம் தொடர்ந்தது. நகரெங்கும் பயணிகள் நிறைந்திருந்தனர். தெருக்களில் வணிகர்களும், மலர்கள், கொடிகள் விற்போரும் நிறைந்திருந்தனர். வீதிகள் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன.

அதிகாலையில் லீ தனது நண்பன் சரிபுத்தனோடு புனித கங்கையில் நீராடச்சென்றான். அதன் பிரமாண்ட அகலத்தைக் கண்டு பிரமித்தான். பிரயாக்கில் யமுனையும் கலப்பதால் இரண்டும் இணைந்து மிரட்டின.

“பல மதங்களின் கருத்துக்களை இணைக்கும் விழா இந்நதிக்கரையில் நடப்பது எவ்வளவு பொருத்தமானது,” லீ வியந்து கூறினான்.

புத்தரை மட்டுமின்றி, சிவனையும், சூரியனையும் அரசர் ஹர்சர் வழிபடுகிறார் என அறிந்து மகிழ்ந்தான். பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட அறிஞர்கள் ஒன்று சேர்ந்து தத்தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.
“ஒவ்வொரு நதியும் தனது பாதையின் மூலம் ஒரே கடலைச் சென்றடைவதைப் போலத்தான் ஒவ்வொரு ஆன்மாவும் ஒரே இலக்கைச் சென்றடைகிறது” சரிபுத்தன் ஒருநாள் இவ்வாறு விளக்கினான்.
லீ ஒப்புக்கொண்டான். “ஆமாம் சரிபுத்தா. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியான மனித அவமதிப்பு தொடர்கிறது. எனக்கு ஒன்றும் உனக்கு ஒன்றுமாய் ஆனபோதிலும் எல்லா மதக்கருத்துக்களும் விவாதிக்கப்பட வேண்டியவைதான்.”

பல்வேறு அறிஞர்களைச் சந்தித்தது குறித்து மிகுந்த பெருமை கொண்டான் லீ. ஆனார் ஹர்சரைப் பார்த்ததும் மிகுந்த ஆச்சரியமடைந்தான். அரசர் தங்க, வைர ஆபரணங்களால் மூழ்கடிக்கப்பட்டிருந்தார். மார்பை வைரக்கற்களும், கழுத்தைப் பொன் ஆபரணங்களும் அலங்கரித்தன. ஹர்சவர்த்தனர் எளிய மனிதர் என அவன் கேள்விப்பட்டிருந்தான்!
“இவ்வளவு நகைகளை சுமந்து கொண்டிருப்பது மிகவும் கடினம். என்னால் இதைச் சுமந்துகொண்டு நேராக நிற்கக்கூட முடியாது சரிபுத்தா!”

“பொறு பொறு லீ. இன்னும் சிரிது நேரத்தில் உனது கருத்துக்களை நீயே மாற்றிக்கொள்வாய்.”
விழா முடிவுக்கு வந்ததும், ஹர்சர் ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும் தன் கஜானாவில் இருந்த செல்வங்களை ஒவ்வொன்றாய் வழங்கத் துவங்கினார். நீளமான வரிசையில் ஏழைகள் அரசர் ஹர்சரிடம் பரிசு பெறக் காத்திருந்தனர். தனது சொந்தச் செல்வங்களைப் பெட்டி பெட்டியாய் வழங்கிக் கொண்டிருந்தார் அரசர். லீ அரசர் ஹர்சரை நினைத்துப் பெருமைப்பட்டான்.
“கஜானா தீர்ந்துவிட்டதே. அரசர் இப்போது என்ன செய்யப் போகிறார் சரிபுத்தா?” எனக்கேட்டான் லீ.

“பொறுத்திருந்து பார்ப்போம்!”
கஜானா தீர்ந்ததும், அரசர் தான் அணிந்திருந்த நகைகளை ஒவ்வொன்றாய் வழங்கத் துவங்கினார். வரிசை முடியும்போது அரசரிடம் நகை ஏதும் இருக்காது. கடைசி மனிதன் வரும்போது அவனுக்குத்தர அரசரிடம் எதுவும் இல்லை தான்.

அவன் அரசனைப் பார்த்து, “அரசே, உங்களைக் கண்டதே போதும். எனக்கு வேறு எதுவும் வேண்டாம். உங்கள் ஆட்சியில் எனது தேவைகள் அனைத்தும் பூர்த்தியடைந்துவிட்டன மகாராஜா!” என்றான்.

“இல்லை இல்லை. இத்தனை நேரம் காத்திருந்த உன்னை வெறும் கையோடு அனுப்ப முடியாது. பொறு” என்றார் ஹர்சர்.

மொத்த மக்கள் கூட்டமும் மௌனமாகியது. அரசர் தன் அருகில் இருந்த சகோதரி ராஜஸ்ரீயிடம் ஏதோ பேசினார். இருவரும் உள்ளே சென்றனர். அரசர் திரும்பி வரும்போது ராஜஸ்ரீயின் மேல் அங்கிகளை அணிந்து கொண்டு தனது அங்கியை கையில் வைத்திருந்தார். காத்திருந்த மனிதனுக்கு தனது அரச அங்கியைப் பரிசளித்தார்.

மொத்தக் கூட்டமும் ஆரவாரம் செய்து பாராட்டியது. லீ தனது பிரயாக் பயணத்தில் இது மறக்க முடியாத நிகழ்வாக என்றென்றும் நினைவில் நிற்குமென எண்ணிக் கொண்டான்.

“சரிபுத்தா நான் அரசனைப்பற்றிய எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். நீ சொன்னது சரிதான் உங்களுக்கு மிகச் சிறந்த அரசர் கிட்டியுள்ளார்” என்றான்.

த.வே.பத்மா
நன்றி துளிர்