Friday, December 8, 2006

சென்னை சில்க்சும் - போரூர் மக்களும்



பத்திரிக்கைகளில் சமீபத்தில் வெளிவந்த இரு செய்திகள் கவனிக்கத்தக்கவை. ஒன்று சென்னை சில்க் கட்டிடத்தில் அத்துமீறி கட்டப்பட்ட தளங்களை அகற்றியது. மற்றொன்று சென்னை போரூர் ஏரியில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியது. சென்னையில் உள்ள புகழ்பெற்ற வணிக நிறுவனங்களில் ஒன்றான சென்னை சில்க், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதியளித்த தளத்திற்கு அதிகமாகத் தளங்களைக் கட்டியதால் அதை இடிக்கக் கோரி டிராபிக் ராமசாமி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கில், சென்னை சில்க் அனுமதி பெறாமல் அதிகமான தளங்களைக் கட்டியது தெரியவந்தது. எனவே, சென்னை உயர் நீதி மன்றம் அந்த அனுமதி பெறாத கட்டிடங்களை இடித்து தள்ள உத்தரவு இட்டது. இதை எதிர்த்து சென்னை சில்க் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை மாநகரத்தில் அனுமதியளிக்கப்பட்ட கட்டிடங்களில் சுமார் 32,000 கட்டிடங்கள் விதிமுறைகளை மீறியுள்ளதாகக் கூறப்படுகிறது. நீதிமன்றங்களின் உத்தரவையடுத்து அக்கட்டிடங்களின் தளங்கள் பொதுமக்களின் நலனிற்காக (தீ அல்லது போதுமான வாகன நிறுத்துமிடம் போன்ற ஆபத்திலிருந்து தப்பிக்க) இடிக்கப்பட உள்ளது. இதுமேலும் ஹோட்டல்கள், அடுக்குமாடிகுடியிருப்புகள் போன்றவற்றிலும் உள்ள அனுமதி பெறாத கட்டிடங்கள் இடிக்க அல்லது மாற்றயமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

வணிக நிறுவனங்களின் ஒரே குறிக்கோள் லாபம் ஈட்டுவது மட்டுமே. அதை பெறுவதற்காக அவர்கள் குறைந்த வேலைக்கு ஆட்களைத தேர்வு செய்வதும், அவர்களுக்கு எந்தவித வசதிகளும் செய்து தராமல் தங்க வைப்பதும், எட்டுமணி நேர வேலை என்பதும் மறுக்கப்பட்டு வருகிறது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. தற்போது அவர்கள் தங்கள் லாபத்திற்காக சட்டத்தையும் மீறுவார்கள் என்பதை நீதிமன்றங்களின் தற்போதைய தீர்ப்பு உணர்த்தியுள்ளது.

பெரும் பணக்காரர்களுக்கு சொந்தமான அல்லது அவர்களால் நிர்வகிக்கப்படும் இத்தகைய நிறுவனங்களுக்கும், அவற்றை கட்டும் பெறியாளர்களுக்கும், அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் கட்டடங்களைக் கட்டுவது சட்ட விரோதம் என்று தெரியாதா? தெரிந்தே அவர்கள் சட்டத்தை மீறியுள்ளனர். பணம் இருந்தால் அவர்கள் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்ற கருத்தை நீதிமன்றங்கள் தங்களுடைய தீர்ப்பின் வாயிலாக தகர்த்துள்ளன. தெரிந்தே, அரசை ஏமாற்றும் நோக்கத்துடன் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களை கடுமையான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.

அடுத்து, போரூர் ஏரியில் ஆக்கிரமித்திருந்த வீடுகள் உட்படை அனைத்தும் அகற்றப்பட்டன என்பது. போரூர் ஏரியில் பல ஆண்டுகாலமாக மக்கள் வசித்துவருகின்றனர். நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு கூடாது என்பது தான் நமது நிலையும் கூட. ஆனால், அவ்வாறு ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களல் பல கான்கிரீட் கட்டிடங்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இக்கட்டிடங்களைக் கட்ட குறைந்த பட்சம் 6 மாதத்திலிருந்து 1 வருடம் தேவைப்பட்டிருக்கும்.

ஆறு மாதங்களுக்கும் மேலாக அக்கட்டிடங்கள் கட்டப்பட்ட நிலையில் அதிகாரிகள் 6 மாதம் முதல் 1வருடம் வரை அந்தப் பகுதிக்குச் செல்ல வில்லை என்பதை ஒத்துக் கொள்கிறார்களா? மேலும், அப்பகுதியில் கட்டப்பட்ட வீடுகளுக்கு பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. அதை வழங்கி யவர்கள் அரசியல்வாதிகள் எனவும் கூறப்படுகிறது. மேலும் ரியல் எ°டேட் காரர்களின் கைங்கர்யமும் இதில் இருப்பதாகக்கூறப்படுகிறது. மக்களை ஏமாற்றிய அரசியல்வாதிகளுக்கும், ரியல் எ°டேட் காரர்களுக்கும் என்ன தண்டனை?

அரசு அவர்களுக்குமாற்று இடம் வழங்கியிருப்பதாகக் கூறுகிறது. இடம் மட்டும் வழங்கினால் போதுமா? வீடுகட்ட அவர்கள் பணத்திற்கு எங்கே போவார்கள்? எனவே அரசு அவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் போன்ற அரசு குடியிருப்புகளில் வீடுகளை ஒதுக்க வேண்டும்.
அரசும், அதிகாரிகளும் மழை காலம் போன்ற நேரங்களில் மட்டும் இது போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை விட்டு, எல்லாக் காலங்களிலும் நீர்நிலைப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு ஏற்படா வண்ணம் பாதுகாக்க வேண்டும். நமது நீர் நிலைகளில் நீர் சேகரித்தால் நாம் ஏன் அடுத்த மாநிலங்களில் தண்ணீருக்காக கையேந்த வேண்டும்?

Thursday, December 7, 2006

பேச்சும் - பேரரசும்


திருவாளர் விஜயகாந்த் அவர்கள், கடந்த சட்டமன்றத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்றத் தெகுதிகளில் தனித்துப்போட்டியிட்டார். மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அவரது கட்சி ஒரே ஒரு இடத்தில் (விருத்தாச்சலம் -விஜயகாந்த் போட்டியிட்டது) மட்டும் வெற்றி பெற்றது. அவர் கட்சி ஆரம்பித்த போதும், அதற்குப் பின்பும் அவருடைய கட்சியில் சில அரசியல் கட்சித் தலைவர்கள் சேர்ந்தனர்.
அவர்கள் அனைவரும் அவர்கள் முன்னர் சார்ந்திருந்த கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அல்லது நீதிமன்றத்தில் வழக்குகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள். இது ஏதோ அரசியல் காரணங்களுக்காகப் போடப்பட்ட வழக்குகள் அல்ல. ஊழல் சம்பந்தப்பட்ட வழக்குகள். விஜயகாந்த் அவர்கள் கட்சியின் நோக்கம், கொள்கைகள் என்ன என்று கேட்டால், அதற்கு எந்தப் பதிலும் இல்லை. கட்சியில் ஊழலுக்கு இடமில்லை என்று கூறிவிட்டு ஊழல் செய்துள்ளவர்களை கட்சியில் சேர்த்திருக்கிறேர்களே என்று கேட்டால், ஏன் அவர்கள் திருந்தவே கூடாதா? என்கிறார். நம்முடைய கேள்வி என்னவென்றால், ஒரு வழக்கில் கைதாகி, சிறைத்தண்டனை அனுபவித்து வெளி வந்தவர், அவர் திருந்திவிட்டார் என்பதாக கூறுகிறார் என்றால், அவருடைய வழக்கு ரத்து செய்யப்பட்டு விடுமா? அல்லது அவர் திருந்தி விட்டார் என நீதிமன்றம் சான்றிதழ் கொடுத்து பாராட்டுமா? அதெல்லாம் ஒன்றுமில்லை.
ஒருமுறை முதுல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுவிட்டால், நீதிமன்றம் அவரை விடுவித்தால் மட்டுமே அவர் குற்றச்சாட்டிலிருந்து வெளிவரமுடியும். அவர் மேல் உள்ள கறை நீக்கப்படும். அதைவிட்டு, ஒருவர் திருந்தி விட்டார் என்பதற்காக அவர் மேல் உள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிடாது. விஜயகாந்த் அவர்கள் இதை நினைவில் கொள்வது நல்லது.மேலும், ஜெயலலிதா அவர்கள் விஜயகாந்தைப் பற்றி, சட்டமன்றத்திற்கு குடித்து விட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டினார். இது குறித்து அதிமுக, தேமுதிக அறிக்கைப் போர் நடந்தது. இது குறித்து விஜயகாந்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அந்தம்மாவா எனக்கு ஊற்றிக்கொடுத்தார் என்று மறுகேள்வி கேட்டுள்ளார். செய்தியாளர்கள் மறுபடியும் கேட்டதற்கு மழுப்பலாகப் பதில் சொல்லி, அந்த்க் கேள்விக்கான பதிலை இதுவரை சொல்ல வில்லை.டிசம்பர் மாத முதல்வாரத்தில் மட்டும் இரண்டு செய்திகள் விஜயகாந்த் கட்சி பற்றிய இரண்டு செய்திகள் வெளிவந்துள்ளன. ஒன்று, விஜயகாந்த் பெயரைப் பயன்படுத்தி சில பேர் டெண்டர் எடுத்துள்ளனர். இதனால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றொன்று விஜயகாந்த் கட்சிக் கூட்டத்தில் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளனர்.எனவே, திருவாளர் விஜயகாந்த் அவர்கள் முதலில் தன் கட்சியை ஒழுங்குபடுத்தட்டும், அடுத்து மக்களுக்கு சேவையாற்றட்டும்.