டாலரின் வீழ்ச்சி
ஆர்.எஸ். நாராயணன்
ஐந்தாண்டுகளுக்கு முன்பு டாலர் விலை ரூ. 50ஐ ஒட்டியிருந்தது. இன்றைய நிலை ரூ. 40.45. ஏறத்தாழ 10 டாலர் அளவில் வீழ்ச்சி. இந்திய ஏற்றுமதியாளர் கள் ""ஐயோ ஐயோ'' என்று அலறுகின்றனர். ஒரு வெள்ளைக்காரன் விழுந்து காயப்பட்டால், இந்தியனுக்கு நெறிக்கட்டுவது ஏன்? இதில்தான் உலகமயமாத லின் உண்மை பொதிந்துள் ளது. இன்று சகல உலக சர்வாதிகாரியாக உள்ளவர் அமெரிக்க அதிபர். ""பாட்டும் நானே பாவமும் நானே; நான் அசைந்தால் அசையும் உலகே'' என்று இந்திய அமைச்சர்களைப் பாட வைக்கும் திருவிளை யாடலைச் செய்பவர் அமெரிக்க அதிபர் புஷ். இந்த புஷ்ஷை, புஷ் செய்ய இயலாத நிதியமைச்சர், நிலைகுலைந்து விட்டதுடன், ஏற்றுமதியாளர்களுக்கு நஷ்ட ஈடு நல்கி, இவரும் சில சங்கதிகளைச் சேர்த்துப் பாடுகிறார். சுத்தமில் லாத சுருதிகளைச் சேர்க்கும் இந்த சிதம்பர ரகசியம் என்னவோ? இதனால் இந்தியாவுக்கு எந்த நன்மையும் இல்லை. ஒவ்வொரு பத்தாண்டின் இறுதியிலும் அமெரிக்க டாலர் வீழ்வதும் இந்தியப் பங்குச் சந்தை சரிவதும் வாடிக்கை யாகிவிட்டது. இதற்கான ""காரணம் கேட்டுவாடி'' என்றால் "காதலன் சிதம்பரநாதன்'' மழுப்புவது ஏன்?
அமெரிக்காவில் ""வீட்டு அடமான ஊழலின் விளைவு'' என்று புரியும்படி கூறாமல் ""சப் பிரைம் மார்ட்கேஜ்'' ஒரு புரியாத வாசகம் வெளிவருகிறது. அமெரிக்காவில் வீட்டு விலை சரிந்துவிட்டது. ரியல் எஸ்டேட் சற்று படுத்து விட்டது. சரியான சொத்துப் பத்திரங்கள் இல்லாமல் கட்டட முதலாளிகளுக் குக் கடன் அள்ளி வழங்கப்படும் ஒரு முறையைத்தான் ""சப் பிரைம் மார்ட்கேஜ்'' என்று பூசி மெழுகிக் கூறுகிறார்கள். அமெரிக்க கஜானாவிலிருந்து 2004 - 2006-இல் புழங்கவிடப்பட்ட வீட்டுக்கடன் தொகைகளில் 15 சதம் - அதாவது 1.5 ட்ரில்லியன் டாலர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முடங்கிப் போனதாகத் தகவல். ஒரு ட்ரில்லியன் என்றால் பதினாயிரம் கோடி. அதாவது ஒன்றுபோட்டு பதினோரு பூஜ்ஜியங்கள். 100,000,000,000 சரியா. இந்தக் கவலை எல்லாம் நமக்கு ஏன்?
கவலை உண்டு. உலக வங்கிச் சந்தையில் - உலகப் பங்குச் சந்தையில் அங்கம் வகிக்கும் இந்தியாவுக்கும் இதனால் நஷ்டம். இந்தியா மட்டுமல்ல; உலகப் பங்குச் சந்தையில் பங்கேற்றுள்ள எல்லா வளர்முக நாடுகளுக்கும் நஷ்டமே. எனினும், ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டுள்ள முதலாளித்துவ ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுக்கு பதிலடி தரும் அளவில் பலமுள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் டாலர் வீழ்ச்சி மறைமுகமாக நம்மிடமிருந்து வசூலாகிறது. இந்தியாவில் ஏற்றுமதியாளர்களுக்கு நிதியமைச் சர் மக்களின் வரிப்பணத்தை அல்லவா அள்ளித் தருகிறார். யார் வீட்டு முதலை யார் அள்ளித் தருவது? இப்படி ஏற்றுமதியை மையமிட்டுத்தான் இந்தியா வளர வேண்டுமா? 1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்ற தருணத்தில் நாம் மறந்துவிட்ட நமது தேசப்பிதா மகாத்மா காந்தி, ""இது வெறும் அரசியல் சுதந்திரமே. பொருளியல் சுதந்திரம் பெற்றால்தான் நிஜமான இந்திய சுதந்திரம்'' என்று பகிரங்கமாகக் கூறினார். இந்திய விடுதலைக்குப் பின் காந்தி வாழ்ந்தது ஐந்தே மாதங்கள்தாம். இந்து - முஸ்லிம் மதக்கலவரம் அவர் உயிரைப் பறித்துவிட்டது. காந்தியின் தன்னிறைவுப் பொருளாதாரத் திட்டங்கள் எல்லாமே காலத்திற்கு ஒவ்வாதவை என்று தவறாக முடிவு செய்யப்பட்டு காந்தியின் மறைவுக்குப் பின் அவை படிப்படியாகப் புறக்கணிக்கப்பட்டன. இந்திய விடுதலைக்குப் பின் பிரதமரான நேரு, காலனியப் பொருளாதாரத் தத்துவங்களுடன் சோஷலிசத்தையும் கலப்படம் செய்து ஐந்தாண்டுத் திட்டங்களை வகுத்தார். எனினும் காந்தியப் பொருளாதாரத்தை முற்றிலும் புறக்கணிக்காமல் காதி -கிராமியக் கைத்தொழில் அமைச்சரகத்தை உருவாக்கி நிறைய சலுகைகளையும் வழங்கினார்.
நேருவுக்குப் பின் இந்திரா காந்தியும் சோஷலிசக் கருத்துகளைச் சற்றுத் தூக்கிப்பிடித்த அதே சமயம், பெரிய ஒளிவிளக்குகளுக்கு இடையே உள்ள இருட்டைப் போக்கும் அளவில் ஓர் அகல்விளக்கு அளவில் காந்தியத்தைக் காப்பாற்றினார். இப்போது என்ன நிகழ்கிறது? "தன்னிறைவுப் பொருளாதாரம்'' என்ற அகல்விளக்கையும் அணைத்துவிட்டு, பெயருக்குக் கதராடை பூண்டுள்ள காங்கிரஸ் அமைச்சர்களும், கதராடை அணியாத காங்கிரஸ் அமைச்சர்களும் "உலகமயமாதல்'' என்ற அமெரிக்கச் சுரண்டலுக்கு அடிபணிந்து, ஏற்றுமதியை உயர்த்த இந்தியாவை வளர்ப்பதாக எண்ணிக்கொண்டு, நாட்டையே அமெரிக் காவுக்கு அடகு வைக்கின்றனர். உணவு உற்பத்தி குறைந்து உணவு இறக்குமதி நிகழ்வதும், நல்ல விளைநிலங்களில் உணவுப் பயிரை உற்பத்தி செய்யாமல் காட்டாமணக்கை உற்பத்தி செய்து அமெரிக்க -ஐரோப்பிய எரிசக்தி நெருக்கடியைத் தீர்ப்பதில் ஆர்வமாயுள்ளனர். அமெரிக்காவிலிருந்து கோதுமை வாங்குவார்கள். தாய்லாந்திலிருந்து அரிசியை வாங்குவார்கள். ஆப்பிரிக்காவி லிருந்து மக்காச்சோளமும் காக்காச்சோளமும் வரலாம். இந்தியாவோ காட்டா மணக்கு எண்ணெயை ஏற்றுமதி செய்யும். இப்படியெல்லாம் இந்தியாவை அச்சுறுத்தி, அமெரிக்கா நம்மை மானபங்கம் செய்து, டாலர் வீழ்ச்சியிலிருந்து தப்பிக்கும். இன்று அமைச்சர்களின் பணியே நாட்டை விற்பதுதானே! அமெரிக் காவில் டாலர் வீழ்ச்சியுறலாம். ஆனால் இந்திய அமைச்சர்களுக்கு டாலர் வந்து கொண்டிருக்கும்.
இந்தியப் பிரதமராயிருப்பவர் ஒரு காலகட்டத்தில் உலக வங்கியில் பணிபுரிந்தவர் என்பதால் அமெரிக்க டாலர் வீழ்ச்சிக்கு அவரும் பொறுப்பேற்று அதைத் தடுத்து நிறுத்தப் பாடுபடுவதும் இயல்புதானே. ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் கவனிக் கப்படும் தரம், குறிப்பாக வேளாண் ஏற்றுமதியில் கண்காணிக்கப்படும் நச்சின் அளவுகோல் உள்ளூர் விற்பனையில் இல்லை. ஆகவே நாம் ஏற்றுமதி செய்யும் நறுமணப் பொருள் களான மிளகு, ஏலம், காபி, தேயிலை போன்றவை நல்ல தரத்தில் விஷமில் லாமல் இயற்கை வழி மூலம் ஊட்டம் வழங்கக் காட்டப்படும் முனைப்பு, நாம் உண்ணும் உணவுப் பொருள்களுக்கோ, காய்கறி களுக்கோ வழங்கப்படுவ தில்லை.
தேவர்கள் அமிர்தம் உண்ண அசுரர்களைப் பயன்படுத்தினார்கள். திருப்பாற்கடலைக் கடைவதற்கு மட்டும் அசுரர்கள் பயன்பட்டார்கள். தேவர்களுக்கு அமிர்தம் கிடைத்தது. அசுரர்களுக்கு விஷம் கிடைத்தது. இன்று தேவர்களாயுள்ள அமெரிக்கர்களுக்கும் வெண்தோல் ஐரோப்பியர்களுக்கும் விஷமில்லாத அமிர்த உணவை நாம் ஏற்றுமதி செய்கிறோம். விஷமான உணவை நாம் உண்டு நோயுறுகிறோம். இது போதாது என்று பன்னாட்டு நிறுவனங்களின் கோகோ கோலா, பெப்சி கோலா, பாண்டா, மிரண்டா என்ற பல விஷங்களும் நமக்குத் தண்ணீராய்க் கிடைக்கிறது. ஏற்றுமதி ஏற்றுமதி என்று கூறி, அன்னிய மூலதனத்தை வரவழைத்து, பன்னாட்டு வங்கிகளையும் வரவழைத்து, உலக வங்கிக் கடன்களைக் கொட்டி, அமெரிக்காவின் ஒரு காலனி நாடாக இந்தியாவை மாற்றிய பின்னர், டாலரின் வீழ்ச்சி என்பது நிலையானது அல்லவே.
மென்பொருள் ஏற்றுமதி மூலம் எவ்வளவு டாலர் இந்தியாவுக்கு வருகிறது? ரூபாயில் மதிப்பிட்டால் அவை பல கோடி ரூபாய் என்று நிதியமைச்சர் பேசக்கூடும். இப்போது ஒரு டாலருக்கு 10 ரூபாய் குறைகிறதே. பல கோடி நஷ்டம் அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு வந்துள்ளதே. இந்தியப் பங்குச் சந்தை சரிந்துவிட்டதே. அப்படியெல்லாம் விட்டுவிடாமல் டாலர் விலையை உயர்த்த இந்தியர்கள் பாடுபடுவார்கள். மென்பொருள் ஏற்றுமதி என்று கூறுகி றார்களே அதன் ரகசியம் என்ன? இன்றைய இந்தியாவில் குறிப்பாகப் பொறியியல் பட்டதாரிகள் கூடவே கணினித் தேர்ச்சியும் உள்ளவர்களுக்கு அமெரிக்காவில் வேலை அல்லது அமெரிக்கப் பணிகளை இங்கிருந்து செய்து தரும் நிறுவனங்களில் மாதச்சம்பளம் ரூ. 10,000-இல் தொடங்கி ரூ. 1,00,000 வரை பெறக்கூடிய வாய்ப்பு உண்டு.
இதனால் யாருக்கு லாபம்? கூட்டிக் கழித்துப் பார்த்தால் லாபம் அமெரிக்கா வுக்கு. அமெரிக்கப் பணி செய்யும் இந்திய நிறுவனங்கள் இரவு - பகல் பாராமல் 24 மணிநேரம் பணி செய்கின்றன. அமெரிக்க வேலை செய்யும் இந்திய மென்பொருள் பொறியாளர் களுக்கு லட்ச ரூபாய் சம்பளம் என்றால் அமெரிக்காவுக்கு கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளைச் செய்து டாலர் வீழ்ச்சிக்கு இந்தியர்கள் முட்டுத் தருவதைப் புரிந்து கொள்வது கடினம் அல்லவே.
உலகமயமாதலில் இந்தியாவில் பொறியியல் பட்டதாரிகள் லாபம் பெறலாம். சராசரி நடுத்தர வர்க்க மக்களுக்கோ, விவசாயிகளுக்கோ, சிறு வணிகர்களுக் கோ லாபம் உண்டா? சிறுதொழில், குடிசைத்தொழில், மகளிர் சுய தேவைக்குழு, விவசாயிகள் போன்ற பிரிவினருக்கு எந்தக் கடன் உதவிகளும் வழங்கப் படுவது இல்லை. அமெரிக்காவின் கருவூலச் செயலாளர் ஹென்றி பால்சன், ஒரு காலத்தில் வால்தெரு வங்கியாளராயிருந்தவரின் கருத்துப்படி, 2008-இல் ஏற்பட்டுள்ள இப்போதைய டாலர் வீழ்ச்சி, ""குறுகிய கால வீழ்ச்சியல்ல'' என்று தெரிவித்துள்ளார். எனினும், வளர்முக நாடுகளில் பெறக்கூடிய லாபத்தால் வரும் ஆண்டில் இது சரியாகிவிடும்.
அமெரிக்க ஏற்றுமதி உயர வேண்டுமானால் ரூபாய் மதிப்பைக் குறைத்தாவது டாலர் மதிப்பை உயர்த்த வேண்டும். இந்தியப் பிரதமரும், நிதியமைச்சரும் இதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள். அமெரிக்காவின் உதவி வேண்டுமென்று எண்ணும் விசுவாசிகள். டாலர் வீழ்ந்தாலென்ன? யூரோ வீழ்ந்தாலென்ன? உலக வங்கியையும், உள்நாட்டில் உள்ள அமெரிக்கப் பன்னாட்டு நிறுவன வங்கி களையும் வாழ வைக்கும் இந்தியாவுக்கு இது ஒரு பொருட்டல்ல. விரைவில் டாலரின் மதிப்பு உயரும் வாய்ப்புகள் நிறையவே உண்டு.
Thanks : Dinamani


